பெரும் சுமையாக நீ தாங்கி – என்னை
பெற்றெடுத்து இப் பூமியிலே – உன்
பொற்கரங்கள் தான் நீட்டி
பொரிமா எனக்கு ஊட்டினாயே!
கல்வி நான் கற்கையிலே – நீ
கண்விழித்துக் காத்திருப்பாய்
கல்லொன்று காலில் அடித்தாலும் – நீ
கண்கலங்கி காயத்திற்கு கட்டிடுவாய் . . .
மஞ்சிகன் முடி வெட்டுகையில் – உன்
மடி மீதுதான் என்னை வைத்திருப்பாய்
மஞ்சுனைக் கரம் நீட்டி – உந்தன்
மதலை என்னை அணைத்திடுவாய்…
கண்ணிமையில் தாங்கி – என்னை
காப்பாற்றி வளர்த்தவளே!
காததூரம் நான் சென்றேன் – என்
காதருகில் நீ சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும்
இன்னமும் இனிக்கின்றதே ! – நான்
இன்னலுறும் போதினிலே – நீ
இடியாக உடைந்து போவாய் !!
இன்னமும் இருக்கின்றது – சொல்வதற்கு. . .
ஒரு வார்த்தையில்லை – தாயே!
ஒற்றுமைக்காய் உவமிக்க
ஒருபோதும் முடியவில்லை – ஏன்
ஒரு வார்த்தைதான் தமிழிலில்லை . . .
உன்னருகில் இருக்கையில் – எனக்கு
உன்னருமை தெரியவில்லை
உன்னிப்பாய் என்னைப் பார்த்திருந்த
உன் உறுதுணையும் எனக்கிப்போதில்லை . . .
இதலைக் கொடியுறவு – எனக்கு
இதுவரையும் இருக்கிறதே!
இந்திரை உனை – நான்
இனி எப்போது பார்ப்பேனோ???
இதலை – கொப்பூழ்
இந்திரை – இலக்குமி
மதலை – குழந்தை
மஞ்சுனம் – மிருதுவான் / மென்மையான
மஞ்சிகன் – நாவிதன் / சிகை அலங்கரிப்பவர்
உங்கள் கவிதை உண்மையில் எமது வழிகளையும் வேதனைகளையும் உணர்த்தி நிற்கின்றது உண்மையினை உணர்த்திய அண்ணாவே உனக்கு எம் சிரம்தாழ்த்தி வணங்குகின்றோம் ..உங்கள் பணிகள் மீள் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்
எழுதியவர் சிவரூபன் நாள் ஜூலை13, 2010
நேரம் 4:35 பிற்பகல்
//ஒரு வார்த்தையில்லை – தாயே!
ஒற்றுமைக்காய் உவமிக்க
ஒருபோதும் முடியவில்லை – ஏன்
ஒரு வார்த்தைதான் தமிழிலில்லை . . .//
விரும்பிய வரிகள்.
எழுதியவர் ராஜவன்னியன் நாள் ஜூலை15, 2010
நேரம் 3:10 பிற்பகல்